திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் நகை பணம் பறித்த பெண் கைது
1 min read
Woman arrested for extorting money from youths by pretending to marry
2.12.2022
திருமண ஆசை காட்டி வாலிபர்களிடம் நகை பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். இவர் இவரிடம் இதுவரை 4 பேர் ஏமாறியுள்ளார்.
திருமண ஆசை
சென்னை அருகே தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்த 28வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது அந்தப்பெண் தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து கொண்டார்.
மாயம்
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அந்தப்பெண் அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்தப்பெண் திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த பெண்ணின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.
இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அவளை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.
மகன்
விசாரணையில் அந்தப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது. அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர். அந்தப் பெண் திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
3 திருமணம்
விசாரணையில் அந்தப்பெண் இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. முதலில் அந்தப் பெண்ணுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். அங்கிருந்து ஓட்டம் பிடித்த பெண் கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
அந்தப்பெண் வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார்.
இதையடுத்து அவளுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான பெண் தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையின்போது அவளுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார். இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அவள் அவளது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.