கிழக்கு கடற்கரை சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
1 min read
Work to convert East Coast Road into 6 lanes has started
2.12.2022
கிழக்கு கடற்கரை சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை
ஈ.சி.ஆர். என அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. நீளத்திற்கு 6 வழிச்சாலையாக அகலப்படுத்த 930 கோடி ரூபாய்க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறப்பட உள்ளது. முதற்கட்டமாக பாலவாக்கத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக கொட்டிவாக்கத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை 99 கி.மீ. நீள சாலையை 4 வழித்தடமாக மேம்படுத்தும் பணிகள் ரூ.1,834 கோடி மதிப்பீட்டில் 3 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை 4 வழித்தடமாக மேம்படுத்தும் பணிகள் ரூ.6,845 கோடி மதிப்பீட்டில் 3 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை 4 வழித்தடமாக மேம்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.