July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

‘மாண்டஸ்’ புயல் -சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து

1 min read

Cyclone ‘Mantus’ – 6 flights canceled at Chennai airport

9.12.2022
‘மாண்டஸ்’ புயலால் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

விமானங்கள்

‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம், இரவு 7.10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும், சீரடியில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

முன்னெச்சரிக்கை

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் ‘மாண்டஸ்’ புயலை சமாளிக்கும் விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்வது குறித்து உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் விமான பயணிகள் மற்றும் விமானங்களை பாதுகாப்பதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆணையக அதிகாரிகள், மத்திய தொழிற்படை போலீசார், விமான பாதுகாப்பு படை போலீசார், விமான நிறுவன அதிகாரிகள் கொண்ட பணிக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழு நிலைமையை கணக்கிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் விமான நிலையத்துக்கு அருகாமையில் தங்க வைக்கப்பட்டு உள்ளது. மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டு சென்னையில் தரை இறங்க முடியாமல் விமானங்கள் திருப்பி விடப்பட்டால் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில தரை இறக்க கூடுதல் இடவசதிகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.