July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நீலகிரியில் கோவிலுக்கு சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பலி – ஒருவரை தேடும் பணி தீவிரம்

1 min read

3 women killed in flash floods while visiting temple in Nilgiris – search for one intensified

13.12.2022
நீலகிரியில் கோவிலுக்கு சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை.

காட்டாற்று வெள்ளம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் அந்த கோவிலில் தீப வழிபாடு நடந்து வந்தது. இதனால் இந்த மாதம் முழுவதும் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்படும். மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.
நேற்று மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். வழிபாடு முடிந்து பக்தர்கள் இரவு நேரமானதும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள். பக்தர்களில் ஒரு பகுதியினர் தரைப்பாலத்தை கடந்து ஆற்றின் மறுகரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியது.

4 பெண்கள்

இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அலறி அடித்து மீண்டும் கோவில் உள்ள ஆற்றங்கரைக்கு தப்பி ஓடினர். ஆனால் 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை ஆற்று வெள்ளம் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததாலும், இருள் சூழ்ந்து இருந்ததாலும் 4 பேரையும் மீட்க முடியவில்லை.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோவில் பகுதியில் தவித்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். மொத்தம் 800 பேரை கயிறு கட்டி மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குறித்து மசினக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கவரட்டி, ஜெக்கலொரை என்ற இடத்தைச் சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தொடங்கியது. இரவு வெகு நேரமாகி விட்டதால் அவர்களை தேடும் பணி பாதிக்கப்பட்டது. இன்று காலை மாயமான 4 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். படகு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆற்றில் இறக்கி மீட்பு பணி நடந்தது. இதில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண் பக்தர்களில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்ட்ட்னர். ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.