கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Court orders Kallakurichi student to hand over cell phone to police
15.12.2022
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்கும் படி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 4 முறை வழக்கு சம்மந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை. இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடைய உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
என்ன பிரச்சினை
அப்போது, மாணவி செல்போன் வைத்திருக்கவில்லை. விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் தங்களுக்கு பேசியதாக மாணவின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா, இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் இருந்தும் அதனை மறைத்தால் அது சட்டப்படி குற்றம். அதற்காக விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும். எனவே செல்போன் இருந்தால் அதை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தார்.