July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அன்புமணி கோரிக்கை

1 min read

Anbumani’s request to ban online gambling using Article 162 of the Constitution

19.12.2022
அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் சூதாட்டம்

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு இன்றுடன் 63 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும். தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162 பயன்படுத்தப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கு எத்தகைய அவசரமும், அவசியமும் ஏற்பட்டதோ, அதே அவசரமும், அவசியமும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து பேரவையில் சட்டம் இயற்றப்பட்டதால், அதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் கடந்த நவம்பர் 27-ந்தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின் 16 நாட்களில் 6 பேர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட அவசரமும், அவசியமும் இருக்க முடியாது. இவற்றையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு அதன் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் நிர்வாக ஆணை பிறப்பிக்க அரசு தயங்க வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, இது மாநில அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது தொடர்பான விவகாரம் ஆகும். எனவே, தமிழக அரசு எந்த தயக்கமும் இல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அதை நீதிமன்றங்களில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.