அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபர் உடல்கருகி பலி
1 min read
Indian-origin businesswoman dies in US
19.12.2022
இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபரும் அவரது செல்லப்பிராணி நாயும் உடல் கருகி உயிரிழந்தனர்.
பெண் தொழில் அதிபர்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து என்ற பகுதியில் ‘டோனட்ஸ்’ இனிப்புக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபர் தான்யா பதிஜா (வயது 32). இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கோபிந்த் பதிஜா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார். தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தை, தாயார் வசித்து வரும் வீடும் லாங் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே உள்ளது.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கியுள்ளார். தான்யா வீட்டில் அவர் வளர்த்த செல்லப்பிராணி நாயும் இருந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. தான்யா பதிஜா நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததால் தீப்பற்றியது குறித்து அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
சாவு
இதில், உறங்கிக்கொண்டிருந்த தான்யா பதிஜா மற்றும் அவரது செல்லப்பிராணி நாய் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை தான்யா பதிஜாவின் தந்தை நடைபயிற்சிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அண்டை வீடான தனது மகள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க மீட்புக்குழுவினர் வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனால், தீயில் சிக்கிய தான்யா பதிஜா உயிரிழந்தார். அவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.