வாட்சுக்கான ரசீதை அண்ணாமலை உடனே வெளியிட அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை
1 min read
Minister Senthil Balaji requested Annamalai to immediately release the receipt for the watch
20.12.2022
“வாட்சுக்கான ரசீதை அண்ணாமலை உடனே வெளியிட வேண்டும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
அண்ணாமலை வாட்சு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார். இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
1000 கோடி ரூபாய்
மின் கட்டண உயர்வால் மின்சாரத்துறைக்கு ரூ 1000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் 1.20 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் அனைவரும் ஆதாரை இணைக்க வேண்டும். நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான், மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் .
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மின் இணைப்பு
34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 18,866 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். பொங்கலுக்கு முன்பாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். 2.67 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் பேர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் மூலமாக மொத்தம் 58 லட்சமும் சிறப்பு முகம் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 67 லட்சம் பேர் இணைத்துள்ளனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.