கொரோனா முன்னெச்சரிக்கையாக மீண்டும் முகக்கவசம் அணிய மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Central government instructions to wear masks again as a precaution against Corona
22.12.2022
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சீனா கொரோனா
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டவியா கூறியதாவது:-
முகக் கவசம்
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். புதிய வகை கொரோனா பரவலை தீவ்ரமாக கண்காணித்து வருகிறோம். புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது.சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.