நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
1 min read
Parliament Winter Session: Both Houses adjourn indefinitely
23.12.2022
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
குளிர்கால தொடர்
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.
நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதனால் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் 17 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதேபோல் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒத்திவைப்பு
இந்நிலையில், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நடப்பு கூட்டத்தொடரில் 97 சதவிகிதம் மக்களவை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.