வாசுதேவநல்லூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் தற்கொலை
1 min read
Mother commits suicide by throwing her 2 children into a well near Vasudevanallur
4.1.2023
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ஆத்துவழி ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். டிப்பர் லாரி டிரைவர். இவரது மனைவி மீனா (வயது 28). இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். மீனாவின் சொந்த ஊர் மதுரை பழங்காநத்தம் ஆகும்.
திருமணத்திற்குப் பின்னர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தியா முமீனாள் (5), முகிஷா முமீனாள் (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் தியா முமினாள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மீனாவிற்கும் முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனா தீக்குளிக்க முயன்றும், விஷம் அருந்தியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை முருகன் காப்பாற்றி உள்ளார் . இருப்பினும் இருவருக்கும் தகராறு நீடித்துக் கொண்டே வந்துள்ளது.
கொலை-தற்கொலை
இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்படவே மீனா அப்பகுதியில் உள்ள கிணற்றிற்கு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் வீசி கொலை செய்த மீனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீனா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.