July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கிராமிய கலைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

1 min read

Proud to bring rural arts to you – Statement by Chief Minister M. K. Stalin

4.1.2023
“நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது” என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-

நம்ம ஊரு திருவிழா

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்பு தான் ‘சென்னை சங்கமம்’. தமிழினத் தலைவர் கலைஞர் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா” தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13-ம் நாள் தொடங்கி 17-ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெற இருக்கிறது.வரும் ஜனவரி 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை), சென்னை, தீவுத் திடலில் ‘சென்னை சங்கமம்-2023’ நிகழ்வை நான் தொடங்கி வைக்கி றேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது ‘சென்னை சங்கமம்’. பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன. இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது. ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு’. ‘கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்’. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.