19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக கோர்ட்டில் போலீசார் தகவல்
1 min read
The police informed the court that rats had eaten 19 kg of ganja
8.1.2023
சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக கோர்ட்டில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கஞ்சா
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்த வழக்கு போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
எலி தின்றுவிட்டது
ஆனால் கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். Also Read – விஷப்பூச்சி கடித்து 3 வயது குழந்தை சாவு முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை ஆகியவற்றில் 3 பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்தது 30 கிலோ கஞ்சா என போலீசார் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் கோர்ட்டில் ஒப்படைத்த போது அதில் 19 கிலோ கஞ்சா குறைவாக இருந்தது. கஞ்சா ஏன் குறைவாக இருக்கிறது என்று போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது எழுத்து பூர்வமாக கடிதம் ஒன்றை கோர்ட்டில் போலீசார் அளித்தனர். அதில், “குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சா, போதைப் பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாமல் காணப்பட்டது. மேலும் மழையாலும் கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் அங்கு எலித் தொல்லை அதிகமாக காணப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கடித்ததால் அதன் அளவு குறைந்து விட்டது” என்று கூறி இருந்தனர்.
விடுதலை
கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் உள்ள எலிகள் தின்று விட்டதாக போலீசார் அளித்த நூதன பதிலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பதிலை கேட்டு நீதிபதி அதிருப்தி அடைந்தார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.