“கவர்னருக்கு எதிரான போராட்டக் களத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அழைப்பு
1 min read
“Marxist-Communist call for all parties to join the protest against the governor
9.1.2023
“கவர்னரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வரம்பு மீறல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதல்வர் பேசியுள்ளார். அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது. அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான பதிலடி.
முதல்வரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது.
போராட்டக் களம்
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் விருப்பம். சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும். ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.