நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் பலி
1 min read
72 people including 5 Indians died in Nepal plane crash
15.1.2023
நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள்.
விமான விபத்து
நேபாளத்தில் இன்று 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இன்று இரவு வரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்தில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது தெரியவந்துள்ளது. விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது” என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையும் படியுங்கள்: உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்- 21 பேர் உயிரிழப்பு விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா (வயது 25), பிஷால் சர்மா (வயது 22), அனில் குமார் ராஜ்பர் (வயது 27), சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), சஞ்சயா ஜெய்ஸ்வால் என எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து பேரில் நான்கு பேர் இந்தியாவில் இருந்து வெள்ளிக்கிழமை காத்மாண்டு வந்துள்ளனர். பிரபல சுற்றுலா தலமான பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்ததாக, நேபாளத்தின் சார்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் ஷா என்பவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் இந்தியாவில் இருந்து ஒரே வாகனத்தில் வந்தோம். அவர்கள் பசுபதிநாதர் கோவில் அருகில் உள்ள கோசாலையில் தங்கினர். பொகாராவுக்கு புறப்படுவதற்கு முன்பாக தாமெலில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். பொக்காராவில் இருந்து கோரக்பூர் வழியாக இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர்’ என்றார்.
விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் 4 பேர் உத்தர பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். தூதரகத்தில் இருந்து வரும் தகவலுக்காக இந்திய அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.