டெல்லியில் 15 மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்து செல்லப்பட்ட மகளிர் ஆணைய தலைவி
1 min read
Chairperson of Women’s Commission dragged by car for 15 meters in Delhi
19.1.2023
டெல்லியில் மகளிர் ஆணைய தலைவி 15 மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்து செல்லப்பட்ட இன்னொரு பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
மகளிர் ஆணைய தலைவி
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் ஸ்வாதி மாலிவால். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது நுழைவு வாயிலுக்கு எதிரே இன்று அதிகாலை 3.11 மணியளவில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, கார் ஓட்டுனர் ஒருவர், அவரை 10 முதல் 15 மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
இதுபற்றி ஸ்வாதி மாலிவால் தனது டுவிட்டர் செய்தியில், “நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்றேன். அப்போது, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர், என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவரை பிடிக்க முயன்றேன். ஆனால், காரின் ஜன்னலில் எனது கையை அவர் சிக்க வைத்து விட்டார். அதன்பின் காருடன் என்னை இழுத்து சென்றார். கடவுள் என்னை காப்பாற்றி விட்டார்” என தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரே பாதுகாப்புடன் இல்லை எனும்போது, நிலைமையை கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
கைது
இதுபற்றி டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவத்தில் குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஹரீஷ் சந்திரா (வயது 47) கைது செய்யப்பட்டு உள்ளார். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றவாளியின் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு விட்டது. ஸ்வாதி மாலிவால் தனது குழுவினருடன் சாலையோரம் நின்று கொண்டிருக்கும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.
அஞ்சலி சிங்
டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணி முடிந்து, ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று அதிகாலையில் விபத்தில் சிக்கி, காரில் 12 கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது. அப்போது, இந்த சம்பவத்திற்கு ஸ்வாதி மாலிவால் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதுடன், கேள்விகளையும் எழுப்பினார். இந்நிலையில், அவருக்கும் இதேபோன்ற ஒரு நிலைமை டெல்லியில் நடந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.