புதுச்சேரியில் சென்னை ஐகோர்ட்டு கிளை-மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு
1 min read
Chennai High Court Branch in Puducherry- Union Minister Kiren Rijiju Announcement
19.1.2023
சென்னை ஐகோர்ட்டின் கிளை புதுச்சேரியில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
அடிக்கல்நாட்டு விழா
புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்-மந்திரி ரங்கசாமி பேசியதாவது:-
சட்டப்பல்கலைக்கழகம்
புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது.
இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.
இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐகோர்ட்டு கிளை
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது, “புதுவையில் சென்னை ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும். புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களில் 5 ஜி சேவையுடன் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.