பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி- முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min read
Rs 3 lakh fund for family of firecracker factory blast victim – Chief Minister’s announcement
19.1.2023
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ,3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், (வயது 48) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.