சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் – கவர்னர் ஆர்.என்.ரவி
1 min read
History of freedom struggle should be rewritten – Governor RN Ravi
23.1.2023
சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ஆர்.என்.ரவி
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்காக போரிட்டவர்களை நாம் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும். எவ்வாறு மறக்க இயலும். சுதந்திரம் கிடைத்த பிறகும் நம் நாட்டில் நமது ராணுவத்தை ஒதுக்கி வைத்தோம். ஆனால் நமது பாரத பிரதமர் 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டியுள்ளார்.
நான் தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நபர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். என்னிடம் 200 நபர்களை பற்றி கூறினார்கள். அவர்கள் எல்லாம் தலைவர்கள், அதை விட களத்தில் நின்று போராடிய நிறைய சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ் நாட்டில் உள்ளார்கள். நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலை போராட்ட வீரர் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். நம் நாட்டில் சுதந்திரத்திற்காக போராடிய எந்த ஒரு வீரர்களையும் மறந்து விட முடியாது. எளிதாக சுதந்திரம் கிடைத்து விட வில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.