கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் தகவல்
1 min read
Recovery of Rs 3,943 crore assets belonging to temples- Minister informs
23.1.2023
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருப்பணி
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் மங்கள லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோவிலில் இன்று (திங்கட்கிழமை), கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு திருப்பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
1,100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோவிலை தொன்மை மாறாமல் புனரமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இக்கோவில் இடத்தில் வசித்து வந்த 53 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிட அமைச்சர் காந்தி ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்திடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு
இது வரையில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இ்வ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.