அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் சஸ்பெண்ட்
1 min read
Students who smashed things in a government school were suspended
9.3.2023
தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி
தருமபுரி, தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடித்து நொறுக்கினர்
அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ-மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.
சஸ்பெண்ட்
இந்தநிலையில் மாணவ-மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.