டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்
1 min read
Kavita appeared in the Enforcement Directorate office in the Delhi Liquor Policy violation case
11.3.2023
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார்.
மதுபான முறைகேடு
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ந்தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
கோஷம்
டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வீட்டு முன்பு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அதே போல் அமலாக்கத்துறை அலுவலகம் அருகேயும் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
காரில் இருந்து இறங்கிய கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.