July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜெயில் சாப்பாட்டுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த
வாலிபர் கைது

1 min read

Teenager arrested for making bomb threat to eat jail food

11.3.2023
ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஜெயில் சாப்பாட்டுக்காக இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினார்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நம்பர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் பயணிகள் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பை குடைகள், ரெயில்வே பணிமனை பகுதி என ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர்.

பதற்றம்

அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் சோதனை செய்ததால் பயணிகள் பதற்றுத்துடன் காணப்பட்டனர்.
இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தேவராணி தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. திடீரென போலீஸ் படையை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்குகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அதுவும் சோதனை செய்தது. மினி பஸ் ரேக், டவுன் பஸ் ரேக், சேலம், நாமக்கல் பஸ்கள் வந்து செல்லும் ரேக், மதுரை, திருச்சி பஸ் ரேக், சென்னை கோயம்புத்தூர் சத்தியமங்கலம் பஸ்கள் வந்து செல்லும் ரேக் என தனித்தனியாக ஒவ்வொரு பகுதியாக போலீசார் சோதனையிட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை ஈடுபட்டனர்.

புரளி

சுமார் ஒரு மணி நேரமாக இந்த சோதனையும் நடந்தது. இதிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணிக்கூண்டு பகுதிக்கும் போலீசார் சென்று சோதனைத்தனர். அங்கு பொதுமக்கள் வியாபாரிகள் அதிக அளவில் கூடுவதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கைது

இதனை அடுத்து வெடுகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் பேசிய போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே போன்ற 2 முறை ஈரோடு ரயில் நிலையம், பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக கூறி புரளி கிளப்பிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது 34) வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தீர்கள் என்று விசாரித்த போது வீட்டு சாப்பாடு நல்லா இல்லை ஜெயில் சாப்பாடு நன்றாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த முறையும் அவரே போன் செய்து மிரட்டல் விடுத்திருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த தனிப்படை போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் சந்தோஷ் குமார் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரிக்க போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து ஈரோடுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் எதற்காக மீண்டும் மிரட்டல் விடுத்தார் என்ற விவரம் தெரிய வரும். இந்த முறை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.