ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின்போது 3 ஏவுகணைகள் தவறுதலாக வீசப்பட்டன- விசாரணைக்கு உத்தரவு
1 min read
3 Missiles mistakenly fired during Army exercise in Rajasthan- Inquiry ordered
25.3.2023
ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின்போது 3 ஏவுகணைகள் தவறுதலாக வீசப்பட்டன. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏவுகணைகள்
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாலைவன பகுதியான இங்கு பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பது, மறைவிடங்களில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள். வழக்கம் போல ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது இங்கிருந்து 3 ஏவுகணைகள் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த சமயம் பயங்கர வெடிசத்தம் போல கேட்டது. ஏவுகணை விழுந்த பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது.
இந்த 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார். இந்த ஏவுகணைகள் 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும். கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் ஆஜசர் என்ற கிராமத்தில் ஒரு ஏவுகணையின் சிதறிய பாகங்களும், அருகில் இருந்த மற்றொரு கிராமத்தில் 2-வது ஏவுகணையின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் 3-வது ஏவுகணை எங்கே விழுந்தது? என்று தெரியவில்லை. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.