இந்தியைப்போல் நாடு முழுவதிலும் தமிழ் மொழியை பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா- மத்திய அரசுதிட்டம்
1 min read
‘Tamil Prachara Sabha’ – central government scheme to spread Tamil language like India throughout the country
8.4.2023
தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இந்தி பிரச்சார சபாவை போல் அனைத்து மாநிலங்களிலும் இதனை அமைக்க இந்திய அரசு அதிரடி திட்டம் வகுத்துள்ளது.
இந்தி பிரசார சபா
தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழியை பரப்புவதற்காக சென்னை, தி.நகரில் 1918-ம் ஆண்டில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில், இந்த நிறுவனத்தை அன்னி பெசன்ட் அம்மையார் 1918-ம் ஆண்டு, ஜூன் 17-ல் தொடங்கி வைத்தார். இந்தியை ஊக்குவிக்க மகாத்மா, தனது மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பி, இங்கு தங்கவைத்து பிரச்சாரமும் செய்திருந்தார். மகாத்மாவும் தி.நகரில் 10 நாட்கள் தங்கி அதன் நிர்வாகத்தை நேரடியாக கவனித்துள்ளார்.
இதன் கிளைகள் திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் 6,000 வரை வளர்ந்துள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இது உள்ளது. இங்கு பல்வேறு நிலைகளில் இந்திமொழிக் கல்வி நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்
இந்தவகையில், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இதன் கிளைகள் வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சான்றிதழ், பட்டயப்படிப்பு என பல வகையில் தமிழ்க் கல்வி போதிக்கப்பட உள்ளது.
இதை இதுவரை எவரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக மத்திய அரசு அமைக்கிறது. இந்தி பிரச்சார சபாவை போலவே இதை அமைத்து மத்திய அரசின் நிதியை அதற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தி பிரச்சார சபா போன்று தமிழ் பிரச்சார சபாவையும் தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழு நிர்வகிக்க உள்ளது.
பிரதமரின் யோசனை
இதுகுறித்து ஒனறிய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழ் பிரச்சார சபா என்பது பிரதமரின் யோசனை. அவருக்கு தமிழ் மொழி மீதுள்ள ஈடுபாட்டினால் இந்த சபா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.
தமிழ் பிரச்சார சபாவுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிரச்சார சபா மூலம் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி பேசி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில், “தமிழ் உலகின் பழமையான மொழி” என்று கூறி பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இத்துடன் நின்றுவிடாமல், எவரும் செய்யாத வகையில், தமிழை வளர்க்க அவர் தமிழ் பிரச்சார சபா தொடங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.