தனிக்குடித்தனம் நடத்த மனைவி வற்புறுத்தினால், கணவர் விவாகரத்து கோரலாம்- கொல்கத்தா ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min read
If wife insists on monogamy, husband can seek divorce- Calcutta High Court action order
11.4.2023
பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து கோரலாம் என கொல்கத்தா ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.
தனிக்குடித்தனம்
மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாப்பூர் குடும்ப நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், பிரசாந்த் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி ஜார்னாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
வழக்கின்படி, தனது கணவர், பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனியாக வரவேண்டும் என மனைவி விரும்பி உள்ளார். பெற்றோரை மகன் பராமரிக்க வேண்டும் என்பதனையே இந்திய கலாசாரம் கற்று கொடுத்து வருகிறது. அதனால், சமூகத்தின் இயல்பான நடைமுறையில் இருந்து மகனை திசைதிருப்ப மனைவி முயற்சிக்கும்போது, அதற்கு சில நியாயமுள்ள காரணங்கள் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில், புகுந்த வீட்டு உறவினர்களிடம் இருந்து பிரிந்து சென்று, கணவருடன் தனிக்குடித்தனம் போக மனைவி விரும்புவதற்கான காரணம் நியாயத்தின் அடிப்படையில் அமையவில்லை. அது கொடூரத்தில் சேரும்.
இதுபோன்ற மனைவியின் செயல்களை எந்தவொரு கணவரும் சகிக்கமாட்டார். எந்தவொரு மகனும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெற்றோரை விட்டு பிரிந்து வர விரும்பவும்மாட்டார் என இரு நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக கொல்கத்தா ஐகோர்ட்டில் ஜார்னா வழக்கு தொடுத்து உள்ளார். இதன் மீது சமீபத்தில் நடந்த விசாரணையில் கொல்கத்தா ஐகோர்ட்டு அளித்து உள்ள தீர்ப்பில், பெற்றோரிடம் இருந்து எந்தவித சட்ட காரணங்களும் இன்றி, பிரிந்து வர வேண்டும் என கணவரை அவரது மனைவி கட்டாயப்படுத்தினால், மனதளவில் கொடுமைப்படுத்துதல் என்ற அடிப்படையில் அந்த நபர் விவாகரத்து கோருவதற்கான மனு தாக்கல் செய்யும் உரிமை உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்தியா கலாசாரம் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய கட்டமைப்பின்படி, பெற்றோருடன் மகன் வசிப்பது என்பது முற்றிலும் ஏற்று கொள்ளப்படத்தக்கது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பினால், அரசனுக்கு ஆசைப்பட்டு புருசனை இழந்ததுபோல் ஆகி விட்டது என்ற பழமொழிக்கு ஏற்ப அந்த பெண்ணின் முடிவு அமைந்து விட்டது.