July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் இருந்து கோழி, மருத்துவக்கழிவுகள் வருகை அதிகரிப்பு

1 min read

Increase in arrival of poultry, medical waste from Kerala

11.4.2023
கேரளாவுக்கு கல், எம்சண்ட் மண் போன்றவை கடத்தப்படுவதாக புகார்கள் உண்டு. குறைந்த அளவு அனுமதி பெற்று அதிகளவு கொண்ட செல்ப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இயற்கை வளத்தை காதுகாக்க வேண்டும் என்றும் கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.
அதோடு கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். தென்காசியில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள், சிமெண்ட் மற்றும் ஏராளமான அத்தியாவசிய பொருட்கள் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது சாதாரணமாக திரும்புவது இல்லை. கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் எண்ணற்ற இறைச்சி கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வருவதும், அதனை தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், புளியங்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், குருவன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சில டிரைவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
தென்காசி மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தினாலும், அதனையும் மீறி ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதித்து விடுகின்றனர்.
இதனால் பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பழைய இரும்பு பொருட்களை அனுப்புகிறோம் என்ற பெயரில் மர்ம கும்பல் அதனுடன் சேர்த்து நச்சுத்தன்மையுடன் விளங்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்புகின்றனர். அவர்கள் அனுப்பும் பொருட்களை தென்காசி மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் தனி தனி செட்டுகளை அமைத்து தரம் பிரித்து பொருட்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கிருந்து மீண்டும் கனிம வளங்களை ஏற்றுவதற்கு தென்காசி மாவட்டத்திற்கு நுழையும் கனரக வாகனங்களும் கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் காட்டு பகுதியில் கொட்டி செல்வதாக புகார்கள் கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் இருந்து பனையங்குறிச்சி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கரும்பனூர் அருகே காட்டுப்பகுதியில் கழிவு பொருட்களை இரவு நேரங்களில் தீ இட்டு எரித்ததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கரும்பனூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடையம் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தென்காசி மாவட்ட மக்களின் மனங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு கேரளா கழிவுகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.