தனுஷை தன் மகன் என வழக்கு தொடர்ந்த கதிரேசன்.. மரபணுவை பாதுகாக்க கோரிக்கை
1 min read
Kathiresan sued Dhanush as his son.. Request to protect genes
11.4.2023
கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது மரபணுவை பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனுஷ்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (வயது 70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக் கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கதிரேசன் -மீனாட்சி இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் டைட்டஸ் கூறியதாவது:-
நடிகர் தனுஷின் அப்பா கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்திருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார். எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் – மீனாட்சி ஆகியோர் தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது.
எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.