பல்லை உடைத்த பல்வீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதியவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
1 min read
No case filed against officials including Balveer Singh who broke his tooth: Marxist Commun. Condemnation
11.4.2023
விசாரணைக் கைதிகளை பல்லை உடைத்து சித்ரவதை செய்த பல்வீர் சிங் உள்பட அதிகாரிகள் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவJ:-
பல் பிடுங்கிய சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்களின் பல்லை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவறிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினோம்.
வழக்குப்பதிவு இல்லை
இச்சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆகிறது. வெளியில் தெரிந்து இரண்டு வாரங்களுக்குள் மேல் ஆகிவிட்டது. ஆனால், சம்பவத்திற்கு காரணமான பல்வீர் சிங் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. காவல் துறை தங்களது துறை அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்துகொள்வதும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரால் மிரட்டப்படுவதால் சொந்த ஊர் வருவதற்கு அஞ்சி வெளியூரில் தங்கி இருக்கின்றனர் என்பதும் மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக அரசு தவறிழைத்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்திரவிட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.