ஆலங்குளம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
1 min read
A teenager was hacked to death near Alankulam
18.4.2023
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நீதிமன்ற விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வாலிபரை பைக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
பொக்லைன் டிரைவர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவரது மகன் மணிகண்டன் (வயது 25) இவர் பொக்லைன் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிடாரக்குளம் பாலத்தின் அருகே வந்தபோது அங்கு மறைந்து இருந்த ஒரு மர்ம கும்பல் திடீரென்று பைக்கை வழிமறித்தது. இதனை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சென்று சாலையோரம் இருந்த ஒரு கடைக்குள் ஓடிய மணிகண்டனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அவர்களது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்ப்பட்டது.
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், ஊத்துமலை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சின்னத்துரை மணிகண்டன் சேகனா மற்றும் போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நாச்சியார் புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரக்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும் மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் மணிகண்டனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகவே நேற்று அவர் தென்காசி நீதிமன்றம் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மக்கும்பல் பழிக்கு பழியாக மணிகண்டனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் ஆலங்குளம் சங்கரன்கோவில் சாலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உடனடியாக ஆலங்குளம் டிஎஸ்பி பழனிக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஜெகத்குரு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர் அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் சொந்த ஊரான கிடாரக்குளம் மற்றும் நெட்டூர் ஆகிய பகுதிகளில் மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-முத்துசாமி, நிருபர், தென்காசி