July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

3 மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாகும்- ஆரஞ்சு எச்சரிக்கை

1 min read

Heat wave severe in 3 states- Orange warning

19.4.2023
3 மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாகும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோடை வெயில்

நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் 9 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களிலும் வெப்ப அலை கடுமையாகும் என்று கூறியுள்ளது.
இந்த 3 மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வெயிலில் நின்று அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 13 பேர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலியானார்கள். எனவே பகலில் வெயிலில் வெளியே செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த வெப்ப அலைகளால் கைக்குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கோடை வெயில் 113 டிகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் பூபால் பள்ளி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 112.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அதற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் 111 டிகிரி வெயில் பதிவானது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான் பூர் பகுதியில் 110.13 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. பீகார் மாநிலம் சுபால் பகுதியில் 108.32 டிகிரி வெயில் பதிவானது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், ஜான்சி, கான்பூர் மற்றும் ஆக்ரா, பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ஆகிய பகுதிகளில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவில் பள்ளி நேரம் அதிகாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை நேற்று 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வறுத்தெடுத்தது. பரமத்திவேலூரில் 105.44 டிகிரியும், சேலத்தில் 105.08 டிகிரியும், திருப்பத்தூர், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் 103.64 டிகிரியும், திருச்சியில் 103.46 டிகிரி வெயிலும், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் 103.10 டிகிரி வெயிலும், மதுரை விமான நிலையம், தருமபுரி ஆகிய இடங்களில் 102.2 டிகிரி வெயிலும், சென்னையில் 101.60 டிகிரி வெயிலும், கோவையில் 101.3 டிகிரி வெயிலும், தஞ்சாவூரில் 100.40 டிகிரி வெயிலும் பதிவானது. தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் பகல் வேளைகளில் வெளியே செல்வதை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை குடித்து தாகத்தை தவிர்த்தனர். அடுத்த மாதம் (மே) அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.