ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது- சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள் வாதம்
1 min read
Right to same-sex marriage – Petitioners argue in Supreme Court
19.4.2023
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை இன்று தொடங்கியது. சமூகத்தின் பாலின் குழுவை போலே அரசியலமைப்பின் கீழ் அவர்களுக்கும் (ஒரே பாலின சேர்க்கையாளர்) அதே உரிமைகள் உள்ளன என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஒரே பாலினத்தவர் திருமணம்
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த நவம்பர் 25-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் பதிலை கேட்டு இருந்தது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 13-ந்தேதி உத்தரவிட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.ரவீந்திரபட், பி.எஸ்.நரசிம்மா, ஹிமாகோசி ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா? என முதலில் ஆராயுமாறு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா முறையிட்டார். அவர் கூறும்போது, இது போன்ற திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தனிப்பட்ட சட்டங்களுக்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளுக்கும் இடையேயான சம நிலையை பாதிக்கும் வகையில் அமையும். திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது முற்றிலும் சட்டம் இயற்றும் அரசமைப்புடன் தொடர்புடையது. இந்த விவகாரத்தில் கோர்ட்டுகள் முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா? என்று முதலில் ஆராய வேண்டும் என்றார்.
அப்போது மத்திய அரசின் இந்த கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை இன்று தொடங்கியது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “நீதிமன்றங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டுமா? என்று நாங்கள் இன்னும் கேள்வி எழுப்புகிறோம் என்றார். அதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, எப்படி முடிவெடுப்பது என்று எங்களிடம் கூற முடியாது. அவர்கள் (மனுதாரர்கள்) என்ன வாதிடுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகல் ரோகத்கி கூறியதாவது:-
உரிமை
சமூகத்தின் பாலின் குழுவை போலே அரசியலமைப்பின் கீழ் அவர்களுக்கும் (ஒரே பாலின சேர்க்கையாளர்) அதே உரிமைகள் உள்ளன. எனவே அனைவருக்கும் உரிமைகள் சமம். இந்த உரிமைகளை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வீடுகளில் தனியுரிமையை விரும்புகிறார்கள். பொது இடங்களில் களங்கத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடிய திருமண அங்கீகாரம் தங்களுக்கும் கிடைக்க விரும்புகிறார்கள். நமது உரிமைகள் ஒரே மாதிரியாக இருந்தால் அதை பெறாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. இந்த அரசால் அங்கீகரிக்கவும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்க வேண்டும். அது நடந்தால் அவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அதை அரசு அங்கீகரித்தால் மட்டுமே களங்கம் நீங்கும் என்றும் கருதுகிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் திருமணம் பற்றி கருத்து மாறி விட்டது. முன்பு குழந்தை திருமணம், தற்காலிக திருமணம், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தது. அவைகள் மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு வக்கீல் கூறும் போது திருமண அங்கீகார விவகாரத்தில் பாராளுமன்றம் முடிவு எடுக்க விட்டுவிட வேண்டும் என்றார்.