ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கியது
1 min read
Operation Kaveri was launched to rescue Indians from Sudan
24.4.2023
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி பணி தொடங்கியது
சூடான் கலவரம்
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடு சூடான். ராணுவ ஆட்சி நடந்து வரும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் காரணமாக பெரும் கலவரம் மூண்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். உள்நாட்டு போரில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
உள்நாட்டு போர் காரணமாக இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுடானில் சிக்கித் தவிக்கின்றனர். சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.
ஆபரேஷன் காவேரி
இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் துவங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்கும் பணிக்கு ‘ஆபரேஷன் காவேரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சூடான் துறைமுகத்தில் சுமார் 500 இந்தியர்கள் வந்தடைந்துள்ளனர்.
“சுடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி திட்டம் துவங்கிவிட்டது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். மேலும் பலர் வரவுள்ளனர். அவர்களை இந்தியா அழைத்துவர நமது கப்பல்கள் மற்றும் விமானம் தயார் நிலையில் உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் மீட்போம்,” என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.