லலித் மோடி மன்னிப்பை ஏற்று வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது
1 min read
The Supreme Court accepted Lalit Modi’s pardon and closed the case
24.4.2023
இனிமேல் செய்ய மாட்டேன் என்ற லலித் மோடி மன்னிப்பை ஏற்று வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது
லலித் மோடி
சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது லலித் மோடி சார்பில் அவரது வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘எதிர்காலத்தில் நீதிமன்றங்களின் கண்ணியம், இந்திய நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நிபந்தனையற்ற, அடிமனதில் இருந்து மன்னிப்பு கோரும் பட்சத்தில், அதனை வழங்குவது தான் சரி என்று நீதிமன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் காரணமாக நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் பெருமனதோடு ஏற்றுக் கொள்கிறோம். மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம்,’ என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அனைவரும் இந்த துறைக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி கூறிய அவதூறான கருத்துக்கு அவர் சமூக வலைதளங்கள் மற்றும் தேசிய நாளேடுகள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.