செங்கோட்டை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
1 min read
2 youths killed in a motorcycle accident near Sengottai in the middle of the night
26/4/2023
தென்காசி, மாவட்டம், செங்கோட்டை அருகே, நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கோவில் உண்டியலில் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கண்ணுபுளிமெட்டு பகுதி மோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லையா என்பவரது மகன் ஆகாஷ் (வயது 19).
இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் செங்கோட்டை மேலூர் அண்ணா தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ஜெகன் (வயது 19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு கோவில் கொடை விழா நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பிள்ளை வலசை ஊராட்சி விஸ்வநாதபுரம் பகுதியில் கலங்காதகண்டி செல்லும் பாதையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே பைக் வந்து கொண்டிருந்த போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி முத்து மாரியம்மன் கோவில் முன்பு இருந்த உண்டியல் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக
செங்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் இளவரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.