July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே அனுமதியின்றி நடந்த தனுஷ் படப்பிடிப்புக்கு கலெக்டர் தடை

1 min read

Collector bans Dhanush’s shooting near Courtalam without permission

26.4.2023
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினர் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக புகார் எழுந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்தி ரன் படப்பிடிப்பு நடத்திட தடை விதித்து உத்தரவிட்டார்

தனுஷ் படப்பிடிப்பு

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதியில் மத்தளம்பாறை கிராமம் அருகில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்போது படப்பிடிப்பு குழுவினர் மத்தளம்பாறை அருகே உள்ள செங்குளம் கால்வாயின் கரைகளை பல இடங்களில் அழித்தும் அந்த மண்ணை எல்லாம் தனியார் நிலத்தில் கொட்டியள்ளனர்.
மேலும் செங்குளம் கால்வாயில் தண்ணீர் வரும் இடத்தை அடைத்து மரப்பாலம் அமைத்து உள்ளனர். அதன் அருகில் மிகப் பிரமாண்டமான கோவில் போன்ற செட் ஒன்று போட்டு கோவில் முன்பாக குடிசைகளால் ஆன சிறிய கிராமம் ஒன்றையும் உருவாக்கி இருந்தனர்.
இவர்கள் செட் போட்டிருந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பாதுகாப்பு பகுதி ஆகும்.

இதை நேரில் பார்த்த இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளரும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும் கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளரும், சமூக ஆர்வலருமான இராம.உதயசூரியன்
வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று படக்குழுவினரிடம் விபரம் கேட்டபோது அவர்கள் இதுபற்றி உங்களிடத்தில் விவரம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று பேசியுள்ளனர்.

புகார்

அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும புகார்களை அனுப்பி உள்ளார். அப்புகார்களில் பொதுப்பணித்துறை அனுமதியின்றி செங்குளம் கால்வாயின் கரைகள் அழிக்கப்பட்டு எவ்வித அனுமதியும் பெறாமல் பாலம் அமைத்து தண்ணீர் வருவதை தடுத்திருக்கும் விபரத்தையும் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் தெளிவு படுத்தி உள்ளார்.

மேலும் முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் வனத்துறையின் தீவிர கட்டுப்பாட்டு பகுதியில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடப்பதையும் சுட்டி காட்டியிருந்தார். மேலும் செட் போடுவதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படாடிருப்பதை குறிப்பிட்ட தோடு இவர்களது படப்பிடிப்பால் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏனெனில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அமைந்திருக்கும் செட்டுகளில் நெருப்பு வைக்கும் காட்சிகள் இடம்பெறுவதையும், துப்பாக்கி சுடுதல் வெடிகுண்டு வீசுதல், பீரங்கி வெடித்தல் போன்ற காட்சிகளும் ,அதிக சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் ஹைமாஸ் மின்விளக்குகளை பயன்படுத்து வதையும் இதனால் வனவிலங்குகள் தங்களுடைய உணவு தண்ணீர் உள்ளிட்ட தேவைகளுக்கு வெளியில் வரமுடியாமலும் வந்தால் திரும்பிச் செல்ல முடியாமலும் கஷ்டப்படும் தகவல்களையும் தெரிவித்திருந்தார்..

மேலும் இந்த பகுதி யானைகளின் வழித்தடம் என்பதால் அந்த வழியாக வந்த யானை ஒன்று திரும்பிச் செல்ல முடியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த விபரமும் அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் இந்த புகார்கள் அனுப்பிய பிறகும் இவர்கள் யாரிடத்திலும் முறையாக அனுமதி பெறவில்லை

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடித்தும் அதிகமான ஒலிகளை ஒளிகளை ஏற்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதை ஆதாரங்களோடு பத்திரிக்கைகள் தொலைக்காட்சி கள் மூலமாக இந்த அக்கிரமத்தை வெளியில் கொண்டு வர இராம.உதயசூரியன் முயற்சி மேற்கொண்டார்..

தடை

மேலும் இந்த தகவல்களை தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார். தகவலறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் உடனடியாக முறையான அனுமதி பெறாமல் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அனுமதியின்றி நடத்தப்பட்ட சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்திட தடை விதித்து உத்தரவிட்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விவசாயிகள் சார்பிலும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் வனவிலங்கின ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பொதுப்பணித்துறை வனத்துறை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார்களை அனுப்பிய சமூக ஆர்வலர் இராம உதயசூரியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பழைய குற்றாலத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் எனும் திரைப்படம் படப்பிடிப்பு நடத்திய பகுதி வனத்துறை மற்றும் முண்டந்துறை புலிகள் வனக்காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்பு குழுவினர் அத்துமீறி அந்த பகுதிக்குள் நுழைந்து எவ்வித அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக அரசு சொத்துக்கள், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தனர். எனவே இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தேன். அதன்படி இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு குழுவினர் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இனியும் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பை துவங்கினால் நீதிமன்றம் சென்று தடையாணை பெறுவதோடு இதுவரை அனுமதியின்றி எடுக்கப்பட்ட படக் காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ஆணைபெற முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.