“கர்நாடகாவில் பாஜக அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஊழல்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
1 min read
“Rs 1.5 lakh crore corruption of BJP government in Karnataka” – Priyanka Gandhi allegation
26.4.2023
கர்நாடகாவில் பாஜக அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக – பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரியங்கா
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகாவுக்கு வந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மைசூரு வந்த அவர், டி.நர்சிபுராவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் சாம்ராஜ்நகரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டிலும், மாலையில் மைசூருவில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.
முன்னதாக, டி.நர்சிப்புராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு எந்த வளர்ச்சி திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. அடிப்படை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பாஜக ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து அரசு திட்டங்களிலும் 40 சதவீத கமிஷன் லஞ்சமாக வாங்கப்பட்டுள்ளது. இதற்காக சந்தோஷ் பாட்டீல் போன்ற ஒப்பந்ததாரர்கள் பலியாகியுள்ளனர்.
பாஜக ஆட்சியில் ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பணத்தை பாஜகவினர் கொள்ளையடித்து இருப்பதால் கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த பணத்தில் 100 எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டி இருக்கலாம். 2250 கிமீ விரைவு சாலையை உருவாக்கி இருக்கலாம். கிராமப்புறத்தில் முன்னேற்ற வேலைகளை பார்த்திருக்கலாம். ஆனால், பாஜகவினர் தங்களின் சொத்துகளை மட்டுமே பெருக்கி கொண்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் மக்களின் நம்பிக்கையை கெடுக்கவில்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறே மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாய கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவுக்கு வந்த பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசவில்லை. 40 சதவீத கமிஷன் அரசை கண்டிக்கவில்லை. ஆனால், காங்கிரஸாரை புதைக்குழி பறிப்பவர்களாக சித்தரித்து பேசியுள்ளனர். இந்தத் தேர்தல் மோடியை மாற்றுவதற்காக நடக்கவில்லை. ஆனால் மோடி தன்னை மையப்படுத்தியே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஊழல் மலிந்திருக்கும் பசவராஜ் பொம்மை அரசை மாற்றவே இந்தத் தேர்தல் நடக்கிறது. அதில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிப்பெறும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.