கோவையில் 7 அடி உயர வஉசி சிலை: முதல்வர் திறந்துவைக்கிறார்
1 min read
7 feet tall statue of Vausi in Coimbatore: Chief Minister inaugurates
28.4.2023
கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
வ.உ.சி. சிலை
நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச் சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.
இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது.
7 அடி உயரம்
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித் துறையின் சார்பில், வ.உ.சி-க்கு முழு உருவ உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்தில் இருந்து உலோகத்தால் இச்சிலை செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழக முதல்வர் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ திறந்துவைப்பார்’’ என்றனர்.