July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

2024-க்குள் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்- முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் பேச்சு

1 min read

India to emerge as 4th largest economy by 2024- Tri-Army Chief Anil Chauhan speech

29/4/2023
அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நாடு

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் கலந்துகொண்டு பேசினார்.அவர் கூறியதாவது:-

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 84 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா, உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்.

உலகின் பாதுகாப்புக்கான சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசை இன்னும் தெளிவாகவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட ஆங்லோ-சாக்ஸோன் நாடுகளால், ஐரோப்பாவுடன் ஒன்றிணைய முடியவில்லை. மற்றொருபுறம், ரஷ்யாவும், சீனாவும் ஈரானுடன் நெருங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளுடனும், ரஷ்யாவுடனும் இந்தியா நெருக்கமான உறவை பேணி வருகிறது.
சர்வதேச புவி அரசியலில் இது மிகவும் தனித்துவமான அணுகுமுறை. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நிலவும் நிச்சயமற்றத் தன்மை காரணமாக, உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகள் தங்களின் ராணுவ பட்ஜெட்டை அதிகரித்திருப்பதில் இருந்து இதனை தெரிந்து கொள்ள முடியும்.

அன்னிய முதலீடு

‘இந்தியாவில் தயாரிப்போம்’ முன்னெடுப்பின் கீழ், தொழில்களுக்கான உரிமங்களைப் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இது பல்வேறு தொழில்களில் சமமான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாதுகாப்புக்கான தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களும் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. பாதுகாப்புக்கான தளவாட உற்பத்தித் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நமக்கான தளவாட உற்பத்தியை நாமே தயாரிப்பதைத் தாண்டி, ஏற்றுமதியையும் அதிகரித்து வருகிறோம். பாதுகாப்புக்கான தளவாட உற்பத்தித் துறை மிகப் பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.