July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min read

Steps taken to rescue Tamils suffering in Manipur- Chief Minister M.K.Stal’s order

9.5.2023
மணிப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 5-ந்தேதியன்று பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள், அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர் மாவட்டம்-1, தூத்துக்குடி மாவட்டம்-1, திருவள்ளூர் மாவட்டம்-2, மற்றும் கடலூர் மாவட்டம்-1, என மொத்தம் 5 தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.