நெல்லையில் அரசு கொடுத்த விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கி விற்க முயற்சி- மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
1 min read
Attempt to sell the agricultural land given by the government in Nellai as housing – Case in Madurai High Court
16.5.2023.
நெல்லையில் அரசு கொடுத்த விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கி விற்க முயற்சி நடப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
விவசாய நிலத்தை திரும்ப பெறக்கோரிய வழக்கில்நெல்லை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க மதுரை உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலம்
கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம், திருமூலநகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லெவிஞ்சிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மாநில அரசு திட்டத்தின் மூலம் கடந்த 2006-ம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு தமிழக அரசு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்கியது. 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதித்து நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
ஏழை விவசாயிகளுக்கு அரசு திட்டத்தின் படி விவசாய நிலம் ஒதுக்கப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகளுக்கு சொத்தை வேறு நபருக்கோ, வேறு பயன்பாட்டிற்கோ மாற்ற கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலம் பெற்றவர்கள் 30 வருட காலத்திற்குள் சொத்தை வேறு நபருக்கு மாற்ற கூடாது என்ற நிபந்தனைகளை மீறி உள்ளனர்.
வீட்டுமனை
விவசாயத்திற்காக அரசு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்கள் லே அவுட்களாக (வீட்டுமனை) மாற்றப்பட்டுள்ளன. இது போன்ற செயலால் எதிர்காலத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு நிலம் கிடைக்காது. எனவே அரசாணைபடி, நிலமற்ற பல ஏழை விவசாயிகளுக்கு அரசு திட்டத்தின்படி விவசாயம் செய்ய வழங்கபட்ட நிலத்தை பயனாளிகளிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். உண்மையான பயனாளிகளை கண்டறிந்து நிலங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து சென்னை வருவாய் நிர்வாக அதிகாரி, நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.