ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
1 min read
Odisha train accident victims are unable to protect the bodies of the officials
7.6.2023
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களின் பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் உடல்களை பாதுகாப்பதிலும் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
ரெயில் விபத்து
மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள். இதில் 205 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 83 பேர் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. பலரது உடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
ரெயிலில் பயணம் செய்து மாயமாகி உள்ளவர்களை உறவினர்கள், பிணவறையில் உள்ள உடல்களை பார்த்து தேடி வருகிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். உடல்கள் அழுகி வருவதால் எம்பாமிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரபாஸ் ரஞ்சன் திரிபாதி கூறும்போது, ‘சிறந்த முறையில் எம்பாமிங்கை 6 முதல் 12 மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும். இறந்த பிறகு 12 மணி நேரத்துக்கும் மேலாக எம்பாமிங் செய்தாலும் அதற்கு பலன் இல்லை. மேலும் உடல்கள் சேதமடைந்துள்ளதால் எம்பாமிங் செய்வது மிகவும் கடினம்’ என்றார்.
இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பலியானவர்களின் உடல்களில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் பொருத்தி பார்க்கும் பணி நடந்து வருகிறது. பலியானவர்களின் உடல்கள் குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் உடல்கள் மோசமாக சிதைந்துள்ள நிலையில் அடையாளம் காண முடியாததால் உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.