நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று 2-வது நாளாக சோதனை ஓட்டம்
1 min read
Today is the 2nd day of test run at Nellai junction bus station
13/6/2023
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது. பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம்
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோர்ட்டு வழக்குகள் காரணமாக பஸ் நிலையம் திறப்பது தள்ளிப்போகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் அதனை தற்காலிகமாக திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளை அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று பஸ் நிலையத்தை சுற்றி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது. பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து பாளை, புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.