விடிய, விடிய சாரல் மழை- குற்றால அருவிகளில் குளிக்க தடை
1 min read
Dawn, dawn rain- Bathing in Courtalam waterfalls prohibited
7/7/2023
குற்றாலம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம்
குற்றால சீசன் இந்த ஆண்டு தாமதாக தொடங்கிய நிலையில், தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அப்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஏமாற்றம்
இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.