July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர் உருவாக்கம்

1 min read

Development of news reader by artificial intelligence technology

11.7.2023
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர் உருவாக்கப்பட்டு உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டியது உள்ளது.
சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் (ஏஐ-ஆர்டி பிசியல் இன்டலிஜென்ஸ்) வளர்ச்சி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் பொழுது போக்குக்காவும், கேளிக்கை நிகழ்ச்சிக்காவும் பயன் படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நாட்கள் செல்ல செல்ல மனித வளத்துறை, சாப்ட்வேர், எந்திரவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் புகுந்து விட்டது.
மேலும் சில துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சாட்ஜிபிடி அறிமுகமானது.
அமெரிக்காவில் கோர்ட்டுகளில் வழக்குகளில் வாதாடுவதற்கு கூட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வக்கீல்கள் அறிமுகமாகி விட்டன.

தன் உருவம்

இதே போல அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தை விர்ச்சுவலாக உருவாக்கி அதை வைத்து ஆன்லைனில் டேட்டிங் தளம் ஒன்றை தொடங்கினார். இந்த விர்ச்சுவல் உருவத்தை வாடிக்கையாளர்களிடம் பேசி பழக விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

இதே போல நியூயார்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி பழகி வருகிறார். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

செய்தி வாசிப்பாளர்

இந்நிலையில் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை காணும் நேரம் வந்து விட்டது. ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ‘ஓடிவி’ நாட்டிலேயே முதன் முறையாக மெய்நிகர் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செய்தி வாசிப்பாளரிடம் செய்திகளை எழுதி கொடுத்தால் அச்சு அசலாக அப்படியே வாசித்து விடுகிறார். கடினமான வார்த்தைகளையும் கூட எந்த திணறலும் இல்லாமலும் லிசாவால் செய்திகளை படிக்க முடிகிறது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த செய்தி வாசிப்பாளரால் தொகுத்து வழங்க முடியும். இந்தியாவில் புதிய மைல் கல்லாக அறிமுகமாகி உள்ள இந்த மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசா பல மொழிகளையும் பேசும் திறன் படைத்தது என்றாலும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் உருவானதன் பின்னணியே சுவாரசியமானது தான். அதாவது இந்த லிசாவின் உருவம் அதே தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மற்றொரு பெண்ணை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அச்சு அசலாக அந்த பெண் போலவே, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட லிசாவும் தோன்றுகிறார். செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியாத யாராவது லிசா செய்தி வாசிப்பதை பார்த்தால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. உண்மையிலேயே ஒரு பெண் தான் செய்தி வாசிப்பது போன்று தோன்றும்.
இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் மூலம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பணியை தொடர முடியும் என்பது போன்ற பல வசதிகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலத்தில் மனிதவள துறையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலைக்கு வேட்டு வைக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த ஆபத்தும் ஏற்படாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதும் சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.