அவதூறு வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு
1 min read
Defamation case-Rahul Gandhi appeals in Supreme Court
15.7.2023
அவதூறு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
ராகுல்காந்தி
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, குஜராத் ஐகோர்ட்டு கடந்த 7-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என்று கூறி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.