July 9, 2025

Seithi Saral

Tamil News Channel

இலங்கைக்கு இந்தியா ரூ.450 மில்லியன் உதவி வழங்கியது

1 min read

India provided Rs.450 million in aid to Sri Lanka

5.8.2023
இலங்கைக்கு இந்தியா ரூ.450 மில்லியன் உதவி வழங்கியது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கவும், இந்தியாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதற்கு இந்தியா சம்மதித்தது. இதன்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மார்ச், 2022-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதன்படி நாடு முழுவதும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்க தேவைப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியை இந்தியா வழங்கும். மேலும் இதற்காக தேவைப்படும் மென்பொருள் ஆலோசனையையும் வழங்கி இந்திய அரசு மேற்பார்வை செய்யும்.

இத்திட்டத்தின்படி, சர்வதேச சிவில் விமானத்துறை அமைப்பின் தரநிலைகளின்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் இலங்கை குடிமக்களின் முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் உள்ளிட்ட சுயசரிதை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதன்மூலம், அரசாங்கத்தின் வறுமை குறைப்பு திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் இதர சேவைகளை வங்கிகள் மூலம், குடிமக்களுக்கு பயனுள்ள முறையிலும் திறமையாகவும் கொண்டு செல்ல முடியும். இதன்படி, இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கு (Sri Lanka Unique Digital Identity Project) நிதியாக இந்தியா ரூ.450 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. “இலங்கையின் நலனில் இந்திய அரசாங்கத்தின் ஆர்வத்தை குறிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரூ.450 மில்லியனை எங்கள் தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹெராத்திடம் வழங்கினார். இத்திட்டத்திற்காக தேவைப்படும் மொத்த நிதியில் இது 15 சதவீதமாகும்” என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான முக்கிய திட்டமான இதன் செயலாக்கத்திற்காக, ஜனாதிபதி செயலகத்தில் பல அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது. இதில் அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக, தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹெராத், இந்திய தூதரக கமிஷனர் கோபால் பாக்லே, மற்றும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கான முதல் செயலாளர் எல்டோஸ் மேத்யூ உட்பட இதர முக்கிய பிரமுகர்கள் இது தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டனர்.
நலிந்திருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசாங்கம் தருகின்ற உறுதியான ஆதரவிற்காக இலங்கை அதிபர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.