கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ரகசிய விசாரணை
1 min read
Central Government Officials Secret Inquiry Regarding Krishnagiri Fireworks Accident
6.8.2023
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து சம்பவம்: மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் மாநில அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.
பட்டாசு விபத்து
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காலை பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இதில், பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், முதற்கட்ட விவசாரணையில் தெரிந்ததாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடி விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை, இந்த விபத்து குறித்து சிபிஐ., அல்லது என்ஐஏ., விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்ததுடன், பாராளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டதில் பட்டாசு குடோனால் வெடி விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் பல தரப்பினரும் மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று மாலை வெடி விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் வீட்டில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன சென்னை தலைமை அலுவலர் தலைமையிலான நான்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டை உள்பக்கம் தாளிட்டு கொண்டு, இறந்த ராஜேஸ்வரியின் கணவர், மகன், மருமகள், மகள் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது, சிலிண்டரால் வெடி விபத்து ஏற்படவில்லை என மனு அளித்துள்ளீர்கள். சிலிண்டரால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக உங்களை போலீசார் கூற சொல்கிறார்களா? இது குறித்து வேறென்ன தகவல்கள் உள்ளது என்ற கோணத்தில் சுமார் 30 நிமிட நேரம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், தாசில்தார் சம்பத் ஆகியோரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் விசாரணைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அதிகாரிகளை தவிர்த்துவிட்டு மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.