பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மறு ஆய்வு மனு – ஐகோர்ட்டு நீதிபதி விசாரணை
1 min read
Review petition in asset hoarding case against Ponmudi – High Court judge hearing
10.8.2023
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று கூறி தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார்.
1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், ‘பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
மறு ஆய்வு
இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கை ஏன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்பது குறித்து 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளேன். இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். எனவே, இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன் என்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.