சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீரமுத்து விழுப்புரத்தைச் சேர்ந்தவர்
1 min read
Chandrayaan3 Project Director Weeramuthu hails from Villupuram
23.8.2023
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று உலக வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை பதித்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக ஒரு விண்கலத்தை சாஃப்ட் லேண்டிங் செய்துள்ளது. பல உலக நாடுகள் முயற்சித்து முடியாத இந்த காரியத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சாதித்துக் காட்டியுள்ளது. இன்று இஸ்ரோவின் இந்த சாதனையை உலக நாடுகள் எல்லாம் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இப்படியாக உலகமே பாராட்டும் இந்த இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக இருந்தவர் தமிழர் என்பது நமக்கு பெருமை. அவரது பெயர் வீர முத்துவேல் இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்.
வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே துறையில் ஒரு டெக்னீசியனாக பணியாற்றியவர். இதனால் இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே கோட்ரஸில் தங்கி இருந்தனர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தார். பின்னர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர் விண்வெளி ஆய்வில் ஆர்வம் இருந்ததால் சென்னை தாம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை ஐஐடியில் மேல்படிப்பு படித்து, ஏர்ஸ்பேஸ் துறையில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். கடந்த 1989 ஆம் ஆண்டு இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இவர் பணியில் சேர்வதற்கு முன்பு மத்திய மாநில அரசுகளிலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு விண்வெளி ஆய்வில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இவரை பணியை ஏற்றுக் கொண்டார்.
பின்பு படிப்படியாக முன்னேறி சந்திரயான் 2 திட்டத்தில் பல முக்கியமான பணிகளை இவர் பொறுப்பேற்று செய்தார். இந்நிலையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக அமையவில்லை என்றாலும் இவரது பணி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதை பார்த்த இஸ்ரோ நிர்வாகம் இவரை சந்திரயான் 3 திட்டத்திற்கு இயக்குனராக அறிவித்தது. அப்படி என்றால் சந்திரயான் 3 திட்டத்திற்கான முழு பொறுப்பு இவரே, இவரது தலைமையில் தான் விஞ்ஞானிகள் எல்லாம் சந்திரயான் 3 திட்டம் குறித்து பல விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டனர். இவர் தலைமையில் லேண்டர், ரோவர் எல்லாம் தயார் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் மூலம் விண்ணில் செலுத்த தயாரானது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட போதே இவர் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். இவர் குறித்த தகவல் பலருக்கும் முன்னேர தெரிந்திருக்கும். இந்நிலையில் இவர் இன்று வெற்றிகரமாக விண்ணில் சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய பின்பு அங்கு அனைவர் மத்தியிலும் பேசினார்.
இவர் இன்று பேசுகையில்: ” சந்திரயான் 3 விண்கலம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் திட்டமிட்டபடி செயல்பட்டு இப்பொழுது வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா நிலவில் தரை இறங்கிய நாலாவது நாடாக மாறியுள்ளது. அது மட்டுமல்ல தென்துருவ பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா தான் இருக்கிறது. இந்த சாதனைக்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் தற்போது நிலவில் தரையிறங்கியுள்ளது உலக நாடுகளை எல்லாம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது இந்தியா மிகப்பெரிய உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது.
இஸ்ரோவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்ட நாட்களாக ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இஸ்ரோ மிகப்பெரிய சாதனை படைக்கும் போது எல்லாம் அங்கு ஒரு தமிழன் நிச்சயமாக ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து அந்த சாதனைக்கு காரணமாக இருக்கிறார். கடந்த முறை சிவன் இருந்தார். இந்த முறை வீரமுத்துவேல் இருக்கிறார்.